கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரவு செலவு கணக்கு அறிக்கையில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. கோயில்கள் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டையும் திமுக அரசு எடுத்து வருகிறது. மேலும் கோயில்களின் சொத்துக்கள் விவரம் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் பல்வேறு கோயில்களை புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில் ஊழியர்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்கு புதிய திட்டம் வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதாவது கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணச் சீட்டுகள் நடைமுறையில் உள்ளன. இந்த கட்டணசேவைகளுக்கு பக்தர்கள் செலுத்தும் தொகைக்கு முறையாக கட்டண சீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்கிற புகார்கள் வரப் பெறுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு. கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சேவைகளுக்குமான கட்டணச்சீட்டுகளையும் கணினி வழியில் வழங்கி முறைப்படுத்துதல் அவசியமாகிறது. தற்போது, கோயில்களில் நடைமுறையில் உள்ள அனைத்து விதமான சேவைகளுக்குரிய கட்டணச்சீட்டுகளை அக்டோபர் 3ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம். நவம்பர் 1ம் தேதி முதல் கோயிலில் உள்ள அனைத்து கட்டண சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

இதற்காக ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கோயில் வலைதளத்தின் மூலமாகவும், கோயிலில் உள்ள கவுன்டரிலும் கணினி வழி கட்டணச் சீட்டு வழங்க தேவையான மென்பொருள் நிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில்களில் மேற்கொள்ள அனைத்து கோயில் அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு கோயிலும் தங்களது கோயிலில் வழங்கப்படும் கட்டண சேவைகளை இணையதளத்தில் பதிவிட்டு அதற்கான அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் குறிப்பிட வேண்டும். என்ஐசி எனப்படும் நிக்கில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளினை தவிர தனியார் நிறுவனங்களின் மென்பொருளினை நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு பயன்படுத்தக்கூடாது. கணினி வழி கட்டணச் சீட்டு வழங்கும் பணியை நவம்பர் 1ம் தேதி மூலம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்த தயார் நிலையில் இருக்கும்படி மண்டல இணை ஆணையர்கள், மாவட்ட உதவி ஆணையர்கள் கண்காணித்து அக்டோபர் 25ம் தேதிக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது” என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.