• Sun. Dec 1st, 2024

கோழிக்கோடு பல்கலைக் கழகத்தினரின் புதிய அறிவிப்பு

Byகுமார்

Sep 23, 2021

கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை மரணங்கள் அதிக அளவில் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வரதட்சணை கொடுமை காரணமாக 34 பேர் பெண்கள் இறந்துள்ளனர்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இப்பிரச்சனை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும் இளைய சமுதாயம் மத்தியில் இப்பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இது தொடர்பாக மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கூட்டத்தில் பேசினார். அப்போது கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது தவறு என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கையை கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கவர்னரின் அறிவுரைப்படி கேரள மாநில பல்கலைக் கழகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் கோழிக்கோடு பல்கலைக் கழகம் வரதட்சணை தொடர்பான ஒரு புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவத்துடன் ஒரு உறுதி மொழி பத்திரம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது
இதுதொடர்பாக கோழிக்கோடு பல்கலைக் கழகம் 2021-22-ம் கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு படிவங்களை அனுப்பி உள்ளது.

அதில் அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை கொடுக்க மாட்டேன் என எழுதி கையெழுத்திட்டு கொடுக்கும் படி கூறியுள்ளது.

எதிர்காலத்தில் உறுதி மொழியை மீறுவோரின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *