நெல்லையில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
பல வருடங்களாக பாஜகவுக்காக தயா சங்கர் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில். “இத்துடன் பாஜ கட்சியில் என் அரசியல் பயணம் நிறைவடைகிறது. என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தயா சங்கர் குறிப்பிட்டுள்ளார். நெல்லை பாஜக எம்எல்ஏவும், சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் தயாசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரோடு மாவட்ட பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த வேல் ஆறுமுகம் என்பவரும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜ கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.