• Mon. May 29th, 2023

நீட் விலக்கு மசோதா விவாதம் . . . அனல் பறந்த சட்டசபை

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய இன்று கூடிய தமிழக சட்டசபை, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.
தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தொடர்பாக சபையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். சபாநாயகராக இருந்து கொண்டு ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்பது மரபு என கூறினார் அப்பாவு.

ஆனால் இயல்பாகவே தமிழக மக்களால் ஜீரணிக்க முடியாத ஆளுநர் திருப்பி அனுப்பியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த வாதமும் சபாநாயகர் அப்பாவுவின் கேள்விகளில் எதிரொலித்தது. தமிழ் நிலத்தின் குடிமகன் என்ற வகையிலும் அப்பாவுவின் குரல்கள் ஏராளமான கேள்விகளை கண்ணியத்துடன் எழுப்பியது. ஆனால் தூங்குவது போல் நடிப்போர் மனசாட்சியை எப்படி தட்டி எழுப்ப முடியும்?

இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். வெறும் 4 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவின் நயினார் நாகேந்திரன், குறுக்கிட்டுக் கொண்டே இருந்தார். சபாநாயகர் அப்பாவும், வெளிநடப்பு செய்யப் போறதுக்கு முன்னாடி எதுக்கு இந்த பில்டப் என பகிரங்கமாகவும் கேட்டுவிட்டார். ஆனால் ஏதோ சொல்லிவிட்டுப் போகனும் என்பதற்காக நயினார் நாகேந்திரன் எதையோ ஒன்றை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். அவருடன் பாஜக எம்.எல்.ஏக்களும் வெளியேறினர்.

இதன்பின்னர் பூவை ஜெகன்மூர்த்தி, பண்ருட்டி வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, விசிக பாலாஜி என அடுத்தடுத்து பேசிய அனைவரும் மேடைப் பேச்சுகளில் நெருப்பை பறக்கவிடுகிறவர்கள். அதுவும் தமிழக சட்டசபை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய கொந்தளிப்பு ஏகமாய் அனைவரது பேச்சிலும் எதிரொலித்தது. அதிலும் முக்கியமாக விசிக சார்பில் பாலாஜியின் பேச்சு மிகவும் கவனிக்கபடவேண்டியது. விசிக பாலாஜி பேசிய போது தமிழகத்தில் 8 கோடி மக்களுக்கு இல்லாத அக்கறை , சட்டமன்ற உள்ள 230 சட்டமன்ற உருபினர்களுக்கு இல்லாத அக்கறை ,உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு திருத்தம் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என்றார்.அதற்கு லாவகமாக பதிலளித்த விசிகவை சேர்ந்த பாலாஜி அய்யா அவர்கள் 4 பேரும் எதிரானவர்கள் அதனால்அப்படி சொன்னேன் என்றார். கூடுதலாக கிராமப்புற மாணவர்கள், மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடுத்த கட்ட பாய்ச்சலையும் அனைவரும் வெளிப்படுத்தினர். இப்படி உஷ்ணம் குறையாமல் போன சட்டசபை நிகழ்வில் அதிமுகவால் குறுக்கீடுகள், சர்ச்சைகள் வெடித்தன.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது பேசாமல் பொதுக்கூட்டம் போல பேசத் தொடங்கினார். 1984-ம் ஆண்டு நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட்டது; 2005-ல் ஜெயலலிதாதான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என பேசினார். ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2006-ல் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என பதிலளித்தார். அப்போது ஜி.ஓ எல்லாம் இருக்கிறது என எடுத்துக் காட்டிய விஜயபாஸ்கரால் அமைச்சர் பொன்முடி எழுப்பிய கேள்வியால் திணறித்தான் போனார். கடைசிவரை பதிலே இல்லை. 1984-ல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்ட விஜயபாஸ்கர் அப்போது யாருடைய ஆட்சி என கேள்வி கேட்டார். எம்.ஜிஆர். ஆட்சி என்று அவரால் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார்.

நீட் என்பதையே இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் என பேச வந்தவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க சட்டசபை சலசலத்தது. சபை முன்னவரான துரைமுருகன் எழுந்து பிரச்சனையை முடித்துவிட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கு வாங்க என்றார். அதேபோல் சபாநாயகர் அப்பாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் மிரட்டி விஜயபாஸ்கரையும் முடித்து கொள்ளுங்க என்றார். இடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குறுக்கீடு செய்ய சற்றே கோபமானார் சபாநாயகர் அப்பாவு.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சத்திலேயே ஆறாத வடு தாங்கியவராய், 16 வயதில் அரசியலுக்கு வந்த என் வாழ்க்கையில் இன்று இந்த நாள் மறக்க முடியாத நாள் என குறிப்பிட்டு திராவிடர் பேரியக்க காலம் முதல் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா காலந்தொட்டு சமூக நீதி சரித்திரம் படைத்த சம்பவங்கள் இந்த சபையிலேயே நிகழ்ந்ததை பட்டியலிட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து வரிக்கு வரி சட்டப்படியும் புள்ளி விவரங்களின்படியும் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் அத்துடன் நிற்கவில்லை. மாநில சுயாட்சி, தேசிய இனங்களின் உரிமை, ஆளுநர் பதவி தேவை இல்லாதது, நீட் எனும் பலிபீடத்தின் கோர முகம் என திராவிடர் இயக்க பாசறை நிகழ்வைப் போல சட்டசபையில் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என மும்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம் எழுப்பியது யாரும் எதிர்பாராதது… சட்டசபை மட்டுமல்ல தமிழகமே ஒரு கணம் திகைப்பில் அதிர்ந்து மீண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *