• Tue. Apr 23rd, 2024

நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மேலும் சுற்றுலா தலங்களில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதற்கிடையில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் கேரளாவிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தருகின்றனர்.

அதாவது கடந்த 29ம் தேதி (சனிக்கிழமை) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 1, 233 பேர் வருகை தந்தனர். நேற்று 3 ஆயிரத்து 348 பேர் பூங்காவை கண்டு ரசித்தனர். ஒரு மாதத்துக்கு பின்னர் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  அதன் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பெரணி இல்லம் மற்றும் பல்வேறு வகையான கள்ளிச்செடிகளை பார்வையிட்டனர். கல்லாகிய மரம், இந்திய வரைபடம் போன்ற அலங்காரங்களை பார்வையிட்டனர். புல்வெளியின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று அங்கு குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். பெரிய புல்வெளி மைதானத்துக்குள் செல்ல தொடர்ந்து தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று மகிழ்ந்தனர். மாடத்தில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் குதிரை சவாரி செய்தனர்.   இதேபோன்று ஊட்டி ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம் பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் சாலையோரங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *