• Fri. Apr 26th, 2024

புதுச்சேரியில் பாஜகவை கழட்டிவிடுகிறாரா ரங்கசாமி?

விஜய் – ரங்கசாமி இருவரின் சந்திப்புகள் ஏற்படுத்திய புகைச்சல் இன்னும் அடங்கவில்லை.. இதனால் ரங்கசாமிக்கு சிக்கல்கள் கூடி கொண்டிருக்கிறது. அதேசமயம், பாஜகவின் அதிரடி பிளான்களும் கையில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பனையூர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் புதுச்சேரி முதல்வர்.. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், அரசியல் காரணங்கள் இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது.

காரணம், விஜய் மக்கள் இயக்கம், இந்த முறை நகர்ப்புற தேர்தலிலும் களமிறங்குகிறது.. இருந்தாலும் விஜய்யை ரங்கசாமி ஏன் சந்திக்க வேண்டும்? என்ற கேள்விகள் வட்டமடித்து கொண்டேயிருக்க இதனை ஒரு விவகாரமாக எடுத்து பிரச்சனையை கிளப்ப தொடங்கி உள்ளன எதிர்க்கட்சிகள்.

புதுச்சேரியை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. ஆட்சி ஆரம்பித்ததில் இருந்தே இரு தரப்பிலும் அதிருப்திகள் உள்ளன.. பிரச்சனைகள் உள்ளன.. தொகுதிப் பங்கீடு, நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் உட்பட பல விஷயங்களில் இந்த பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் பூசல்கள் உள்ளன.. இந்த பிரச்சனையால், மக்களை சரியாக கவனிக்க முடியாத சூழலும் உள்ளது.. 8 மாத காலமாகியும் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டன.

எனவே, டெல்லிக்கு சென்று நிதியை பெற்று வாருங்கள் என்று பாஜக வலியுறுத்தியும், ரங்கசாமி டெல்லி செல்ல தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.. இதற்கு தொற்று பரவலையும் காரணமாக அவர் சொல்வதாக தெரிகிறது.. அதனால்தான் இப்போது அதிமுக கொந்தளித்துள்ளது.. விஜய்யை பார்க்க மட்டும் நேரமிருக்கிறதா? அப்போது மட்டும் தொற்று பரவல் இல்லாமல் போய்விட்டதா? என்று ரங்கசாமியை கேள்விகளால் துளைத்தெடுக்க துவங்கி உள்ளனர்.
எனினும், ரங்கசாமி விஜய்யை சந்திக்கிறார் என்றால் அதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

ரங்கசாமி அரசியலில் மூத்த தலைவர் அன்று 2011-ல் ஜெயலலிதாவையே அசைத்து பார்த்தவர். அவருக்கே ஒரு ஜெர்க் தந்தவர்.. அதேசமயம், யாருக்கும் கட்டுப்படாதவர்.. இதுபோன்ற கூட்டணி ஆட்சி அமைப்பதில் அவருக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பே இல்லை. தனக்கு ஆதரவான கட்சிகளை வைத்து, ஆட்சியை நடத்துவாரே தவிர, பலம்பொருந்திய கட்சியுடன் கூட்டணி வைத்து, அவர்களுடன் மல்லுக்கட்ட ரங்கசாமி என்றுமே விரும்ப மாட்டார்..

8 மாதமாகவே பாஜகவுடன் இணக்கமான போக்கை கையாள முடியாமல் போவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்… எனவே, விஜய்யை வைத்து பாஜகவை கழட்டிவிட பிளான் செய்கிறாரா ரங்கசாமி என்ற சந்தேகமும் புதுச்சேரியில் எழுகிறது.. பாஜகவுக்கு 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்.. 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.. ஒருவேளை விஜய்யை கட்சி ஆரம்பிக்க செய்து, சுயேச்சைகளை உள்ளே நியமித்து, பாஜகவை கழட்டிவிட பிளான் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

ஆனால், இது அவ்வளவு சாத்தியமா? பாஜக லேசில் விட்டுவிடுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.. மற்றொரு பக்கம், தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆதரவு தரும்படி விஜய் கேட்டுக் கொண்டாராம்.. அதனால்தான் ரங்கசாமி அந்த இயக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், மற்றபடி இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்கிறது மற்றொரு தரப்பு..
ஆனாலும், மரியாதை நிமித்த சந்திப்பு என்றால் விஜய்யை மட்டும்தான் ரங்கசாமி சந்திக்க வேண்டுமா? கூட்டணி வைத்துள்ள பாஜகவின் மேலிட தலைவர்கள் ஒருவரையும் சந்திக்கவில்லை.. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரையும் சந்திக்கவில்லையே ஏன்? என்ற இன்னொரு சந்தேகமும் எழுகிறது. எப்படி பார்த்தாலும், 3 சுயேச்சைகள் தான் புதுச்சேரி அரசுக்கு தற்போது ஆதரவு தந்துள்ள நிலையில், அவர்களை வைத்து, ரங்கசாமி போடும் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா? ஆகாதா? விஜய்யின் தயவு இதில் எந்த அளவுக்கு உதவக்கூடும் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *