• Fri. Apr 19th, 2024

காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே
துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ராணுவ முகாம் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலை உள்ளூர்வாசிகள் சிலர் வேலைக்காக ராணுவ முகாமை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ராணுவ முகாமின் நுழைவாயில் அருகே வந்தபோது அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ முகாமின் காவலாளி அடையாளம் தெரியாமல் தவறுதலாக சுட்டதில் அவர்கள் உயிரிழந்ததாக கூறினார். இதனை மறுத்துள்ள ராணுவம், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் கொல்லப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ராணுவ முகாம் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ராணுவ முகாம் மீது கற்களை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டுமென வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *