

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே அமைச்சகம் சார்பில், பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..,
சலுகைகள் வழங்குவது ரயில்வேக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது, எனவே தற்போது மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து தரப்பு பயணிகளுக்கும் சலுகைகளை அதிகரிப்பது சரியல்ல என்று தெரிவித்தார். கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட ரயில்வேயின் பல விதிகளில் இன்னும் சலுகை பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்குவது இந்த விதிகளில் ஒன்றாகும். இது மார்ச் 2020ல் கொரோனா தொற்று காரணமாக நீக்கப்பட்டடது.
தொற்று பரவுவதற்கு முன்பு, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, இந்த சலுகை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், ரயில்வே அமைச்சர் இந்த சலுகையை மீண்டும் அளிக்க மறுத்துவிட்டார். 2019-20 வருவாயை விட 2020-21 ஆம் ஆண்டிற்கான ரயில்வேயின் வருவாய் குறைவாக இருப்பதாக அவர் கூறினார். ரயில்வேயின் வருவாய் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் ரயில் பயணிகளுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டபோது, டிக்கெட்டில் தள்ளுபடி நிறுத்தப்பட்டது. எனினும், சில சிறப்பு பிரிவினருக்கு மீண்டும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுவது துவக்கப்பட்டது. இதில் 4 வகை மாற்றுத்திறனாளிகள், 11 தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாணவ, மாணவியர் அடங்குவர். இவர்களுக்கு கட்டணத்தில் சலுகைகள் தொடங்கப்பட்டன.
கொரோனாவுக்கு முன்னர், குறிப்பிடத்தக்க வகையில், இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களிலும், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வேயில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்கள் பிரிவில் வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு முன்பு, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அனைத்து மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அடிப்படைக் கட்டணத்தில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டது.
