• Sat. Apr 20th, 2024

தொடர் ரெய்டுகள்…டெல்லிக்கு தஞ்சமடைந்த அதிமுக தலைகள்

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடந்து வரும் நிலையில் அதிர்ச்சியில் உள்ள அதிமுகவுக்கு டெல்லி மேலிடம் ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியதாக தெரிகிறது.

அதிமுக, டெல்லி மேலிடத்தின் அறிவுரைக்கேற்ப நடந்து கொள்வதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்வதுண்டு. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது, இணைக்க வேண்டாம் என கூறுவது உள்ளிட்டவற்றை அதிமுகவின் இரட்டை தலைமையை காட்டிலும் டெல்லி மேலிடமே முடிவை எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதைக்கு சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டாம் என டெல்லி மேலிடம் தெரிவித்துவிட்டதால்தான் இன்னும் அவரை அதிமுகவில் சேர்க்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இதனால் அடுத்தது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இரண்டாவது முறையாக அவரது வீட்டில் ரெய்டு நடத்தியதால் அதிமுகவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இதை டெல்லி மேலிடத்தில் தெரிவிக்க, டெல்லி அதிமுக சீனியர் ஒருவரை அதிமுக தலைமை அனுப்பியதாக தெரிகிறது. அங்கு அந்த நபர் டெல்லி மேலிடத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்ததாகவும் தெரிகிறது. அப்போது அவர்கள் இதெல்லாம் ஒன்றுமில்லை. தைரியமாக இருங்கள் என தட்டி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது தவறு என்றும் மேலிடம் அறிவுறுத்தியதாம். மேலும் இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தேசிய அளவில் கூட்டணி தொடரும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டதால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விட்டதை தற்போது பிடிப்போம். மொத்தம் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என நம்பிக்கை கூறிய டெல்லி மேலிடம், தற்போது சசிகலாவின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப அதிமுகவில் இரட்டை தலைமைக்குள் இருக்கும் புகைச்சலை வைத்தே சசிகலா கட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வருகிறார்.

எனவே அது போன்றதொரு சூழலை இரட்டை தலைமையினர் சசிகலாவுக்கு அமைத்து கொடுக்க வேண்டாம் என்றும் அவர்களுக்குள் விரிசல் ஏற்படாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் எங்களை முழுமையாக நம்பி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சொல்லுங்கள் என தூதுவராக வந்த சீனியரிடம் டெல்லி மேலிடம் நம்பிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *