அழகு என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துக் கூறி விட முடியாது. உடல் அழகு என்னும் புற அழகு ஒன்றிருந்தால், மன அழகு என்ற அக அழகும் ஒன்று உள்ளது. ஆனால் காட்சிக்கு இனியதாய் உடல் அமைவதற்காக ஆண்களும் பெண்களும் இயற்கை தங்களுக்கு அளித்த அழகையே திருத்தவும், மாற்றவும் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதையும் இயற்கை சார்ந்த முறையில் செய்தால் ஓரளவு பலனிருக்கிறது. ஆனால், செயற்கையாக அனைத்தையும் செப்பனிடப் போகும் போது தான் உள்ளதும் பழுதாக நேரிடுகிறது.
அழகுக்காக எடை குறைப்பு சிகிச்சை பெற்று, அதன் காரணமாக கடந்த 10 மாதங்களாக கோமாவில் இருந்த சென்னை பெண் அமுதா, சில வருடங்களுக்கு முன்பு இறந்தது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். உடலில் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையால், வயிற்றில் கிழிசல் ஏற்பட்டு அதற்காகவே மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைக்குட்பட்டு இறுதியில் இறப்பை தழுவியுள்ளார் அவர்.
காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் நடிகை ஆர்த்தி அகர்வால் பொறியாளர் ஒருவரை மணந்து அமெரிக்காவில் குடிபுகுந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் மீண்டும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், உடல் எடை அவர் தொழிலுக்கு இடையூறாக அமைந்துவிட்டது. எனவே, எடையை குறைக்க அட்லாண்டிக் நகரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் அங்கு அவருக்கு ஆபத்து காத்திருந்தது. அழகு சிகிச்சையின்போது அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் இறந்தேபோனார். எடை குறைப்பு அறுவை சிகிச்சை என்னும் ‘லிபோசக்சன்’ செய்த போது கொழுப்பு குமிழ் போன்று கிளம்பிச்சென்று இதயத்தில் அடைத்ததால் இறந்து போக நேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த லிபோசக்சன் சிகிச்சைக்குப் பிறகு ஒரு சிக்கல் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்த இடம் நிறம் மாறி மரத்துப்போகும். இது சரியாக சுமார் 6 வாரங்களாவது ஆகும். மேலும், கொழுப்பு உறிஞ்சும் கருவியை செலுத்த ஒரு செ.மீ.க்கு குறைவான துவாரம் போடுவார்கள். அந்த தழும்பு மருந்தால் ஓரளவுக்கு தெரியாமல் இருக்குமே தவிர முற்றிலும் மறையாது. கருவி பயன்படுத்திய அப்பகுதியில் தோல் தடிமனாகவும் கூடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. இந்தச் சிகிச்சைக்குப் பிறகும் நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து மீண்டும் கொழுப்பு படிய வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
உடல் எடை குறைப்புக்கு புதிதாக ‘ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி’ சிகிச்சை உள்ளது. இதுவும் இயற்கைக்கு முரணான சிகிச்சையே. இதன் மூலம் இரைப்பை அளவில் சுமார் 75 சதவிகித்ததை வெட்டி எடுத்துவிடுவார்கள். மேலும் பசியைத் தூண்டும் ‘க்ரெலின்’ சுரப்பியையும் அகற்றிவிடுவார்கள். இதனால் சாப்பிடும் அளவு குறையும். இந்த அறுவை சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில் உடல் எடை 70சதவிகிதம் வரை குறையும் என்கிறார்கள். ஆனால் இதுவும் நிரந்தரமில்லை. ஏனென்றால் இச்சிகிச்சைக்கு பிறகும் இரைப்பை வளர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்குவது பெண்கள் தங்களுக்கு அளித்துக்கொள்ளும் தண்டனை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். முதலில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகிறார்கள். பின்பு ஒவ்வொரு மார்பகத்திலும் உள்ள பைகள் நிறைய ‘சிலிக்கன் ஜெல்’லை நிரப்பி விலாவுடன் பையை சேர்த்து தைக்கின்றனர். இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போகும். இந்த அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட பெண்களுக்கு பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்தல் இருக்கும். மாப்புக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை. துள்ளும் இளமைத் தன்மையை மார்பகம் இழந்து விடுகிறது. தொடக்கத்தில் கம்பீரமாக நிற்கும் மார்பகங்கள் சில வருடங்களுக்குப் பிறகு உருகுலைந்து கவிழ்ந்துவிடுகின்றன.
மிதமிஞ்சிய உணவு, சோம்பலான வாழ்க்கை என அளவுக்கதிகமாக பருத்துவிட்டு பின்னர் எடையை குறைப்பதற்காக ஒத்துவராத சிகிச்சையை செய்துகொண்டு பலரும் கஷ்டப்படுகின்றனர்.
அழகு சிகிச்சைகளுக்கு பெயர் பெற்ற தாய்லாந்து மருத்துவமனையொன்றில் சமீபத்தில் இங்கிலாந்து பெண் ஒருவரின் உயிர் மயக்கத்திலேயே பிரிந்துவிட்டது. மலேசியாவில் உள்ள பினாங்கில் 2009 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை அழகு சிகிச்சைக்கு சென்று அபாயத்தை எதிர்கொண்டவர்கள் பட்டியலை அங்குள்ள பயனீட்டாளர் மன்றம் வெளியிட்டது. அதன்படி மார்பகத்தைப் பெரிதாக்க முயன்ற ஒரு பெண் அறுவைச் சிகிச்சை கோளாறால் மரணமுற்றார். மூக்கை சீரமைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட 34 வயது பெண்மணிக்கு மூக்கு வீங்கிப்போனது. கண்ணுக்கு அடியில் உப்பலையும் கனத்த தொந்தியையும் குறைக்க அறுவைச் சிகிச்சை மேற்கண்ட அரசியல்வாதியின் 44 வயது மனைவி ஒருவர் 10 மாதங்கள் கோமா நிலையில் இருந்து இறுதியாக இறந்துபோனார். 28 வயது பெண்மணி ஒருவர் இளமையாக இருக்க கொலேஜன் ஊசி போட்டதில் முகம் சிதைத்து போனது. மார்பகத்தைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து மார்பக காம்பு அகற்றப்பட்டது. உடலில் கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்பட்ட பிறகு தொடர் சிகிச்சைக்கு சென்று வந்த பெண் இறந்துபோனார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மயக்க மருந்து உடலிலும் ஒவ்வாமையை உருவாக்கிவிட்டது. 30 வயது பெண்ணின் வயிற்றுக்கொழுப்பை எடுத்து மார்பகத்தில் வைத்தபோது அவருக்குத் தொற்றுநோய்க் கிருமிகளால் உடல் மோசமானது. காது மடலில் இருந்த தழும்பை அகற்றச் சென்ற 18 வயது பெண்ணுக்கு காதில் ஒரு பகுதியே பறிபோனது.
அழகுக்கான கடின சிகிச்சை முறைகள் பல நாடுகளிலும் செய்யப்பட்டுவருகிறது. மீன்களை உடலில் கடிக்கவிட்டு தோலின் கடினமான பகுதிகளை அகற்றும் முரட்டு சிகிச்சை சில நாடுகளில் பழக்கத்தில் உள்ளது. அண்மையில் இங்கிலாந்து அரசாங்கம் அந்த மீன்கடி சிகிச்சையை தடை செய்துள்ளது. அழகு சிகிச்சை ஒரே தடவையில் பலனளித்து விடாது. இவற்றுள் 90 சதவித சிகிச்சைகளின் பலன்கள் தற்காலிகமானவையே. ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை நன்றாக இருக்கும். அதன்பின் மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. அதனால் மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்கின்றனர் காஸ்மெட்டாலஜி துறை நிபுணர்கள்.
மைக்ரோ டெர்மாப்ரேசன் முறையில் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் மற்றும் உற்பத்தியை தூண்டி சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுவது ஒரு வகை மருத்துவம். 45 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை 4 முறை மேற்கொண்டால் பிறந்த போது இருந்த நிறத்தை மீண்டும் கொண்டு வர முடியும். ஆனால் அதே நிறம் எப்போதும் இருக்க வேண்டுமானால் தொடாந்து சிகிச்சை எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த லேஸிவில்ட் என்ற 46 வயதுப்பெண் தனது முன்னழகையும், பின்னழகையும் பெரிதாக்க இதுவரை 36 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். துரதிஷ்டவசமாக இளமையிலேயே இறந்து போன மைக்கேல் ஜாக்சன் ஐம்பது தடவைகளுக்கு மேல் தன் உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டவர். நடிகை பரியங்கா சோப்ரா மூக்கு பகுதியை சீரமைக்க ரைனோபிளாஸ்டி எனும் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் நமது ஸ்ரீதேவியிலிருந்து வடக்கே நாற்பது பிளஸ் ராணி முகர்ஜி வரை மூக்கு சீரமைப்பு சிகிச்சை செய்தவர்கள்தாம். அறுபதை தாண்டும் ஹேமமாலினி இன்னமும் தனது முகச் சுருக்கங்களை அகற்ற அவ்வப்போது ஃபில்லர் சிகிச்சை மேற்கொள்கிறாராம். மல்லிகா ஷராவத்தின் முன்னழகு, இடையழகு மேலழகு என அனைத்திற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணம் என்கிறார்கள்.
சுய சிகிச்சை எப்பொழுதுமே ஆபத்து தான். அதிலும் அழகு சிகிச்சையை தகுந்த மருத்துவர் ஆலோசனையில்லாமல் செய்வது மிகவும் ஆபத்து. தென்கொரியாவைச் சேர்ந்த ஹங் மியாகி என்ற பிரபலமான மாடல் முகத்தை அழகாக்கும் ஆகையில் சமையல் எண்ணெயையும் சிலிகனையும் ஊசி மூலம் ஏற்றிக்கொண்டதால் முகம் வீங்கி விகாரமாகிவிட்டது. முன்பு போல் மலர்ந்த முகத்தை கொண்டுவர முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
அளவான உணவு போதுமான உறக்கம் மிதமான உடற்பயிற்சி இருந்தாலே உடல் பருமனை தடுக்க முடியும். மார்பக அழகுக்கு முக்கியத் தேவை புரோட்டீன். புரோட்டீனில் மார்பகம் நல்ல வடிவில் காட்சியளிக்கத் தேவையான கொலாஜனும் இருக்கிறது. எனவே உங்கள் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்ந்து கொள்ளுங்கள். இயற்கை மூலிகை எண்ணை மூலம் மசாஜ் செய்துவந்தாலும் நல்ல பலனை பெறுவீர்கள்.
சாக்லேட்டுகளில் சுவை கூட்டுவதற்காக சேர்க்பப்படும் கோக்கோ ஒருவரின் அதிகப்படியான உடல் எடையையும் அவரது ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கோக்கோவில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்டான ஒலிகோமெரிக் புரோசயனிடினை உணவுடன் கலந்து எலிகளுக்கு கொடுத்ததில் இது தெரியவந்தது.
சிவப்பாக இருக்க சிலர் அழகு கிரீம்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். நிறமிகளின் இயல்பை மாற்றி கூடுதலான நிறத்தைப் பெற முடியாது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. தீங்கில்லாத நல்ல உணவை உண்டு. நன்றாகத் தூங்கி எழுந்தாலே இயற்கை அழகு கிடைக்கும். பருக்கள் வராமல் இருக்க மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும் எளிதில் செரிமானம் நடக்க மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள் காய்கறிகள், கீரைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி சரும மெருகை சரிக்கட்டவும், உறுப்புகளின் எழிலை மேம்படுத்தவும் ஏகப்பட்ட வழிமுறைகள் இயற்கையாகவே உள்ளன. அவற்றை கடைப்பிடித்து இருக்கும் கவர்ச்சியை ஏதோ கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாமே தவிர ஒட்டுமொத்தமாக நமது உடலமைப்பை எந்த மருத்துவத்தாலும் மாற்ற முடியாது. மரபுத்தன்மை என்பதே அனைத்து உயிர்களின் உடலமைப்புக்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை அழகு வெறியர்கள் உணர்ந்து. உயிருக்கு உடல்நலத்துக்கும் வேட்டுவைக்கும் அழகு சிகிச்சை முறைகளை புறக்கணிக்க வேண்டும்.