தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
சென்னையில் 1,800 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பூங்கா உள்ளிட்டவைகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் கிழக்கு 3-வது அவென்யூவில் உள்ள மஸ்ஜித் ஜாவித் பள்ளிவாசலில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த பள்ளிவாசல் நிர்வாக குழு தடுப்பூசி முகாமை ஏற்படுத்தியுள்ளது.