வீடுகளில் மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நாடகம் மூலம் தேனியில் உதவி மின் பொறியாளர்கள் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் டிச.14 முதல் 20ம் தேதி வரை தேசிய மின்சார சிக்கன வார விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று தேனி அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் வீடுகளில் மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, உதவி செயற்பொறியாளர் பிரபு தலைமையில் குழுவினர் விழிப்புணர்வு நாடகம் மூலம் எடுத்துரைத்தனர். இந்த நாடகம் கூட்டத்தில் கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக, தேனி செயற்பொறியாளர் (பொ) சண்முகா வரவேற்றார். மேற்பார்வை பொறியாளர் மணிமேகலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் லட்சுமி, பால பூமி, ரமேஷ்குமார் மற்றும் மனோகரன் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் நிகழ்ச்சியை கொடுத்து வழங்கினார். முடிவில் உதவி செயற்பொறியாளர் முருகேசன் நன்றி கூறினார்.