

50 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏராளமான அவமானங்களையும் சந்தித்து விட்டேன் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் செயல் பணி செய்து கிடப்பதே என்று கடமையை ஆற்றிவருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தனக்கு அவமானம் ஏற்பட்டாலும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதனை ஏற்க தயாராக உள்ளேன் என்று முதல்வர் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் சட்டப்பேரவையின் மாண்பை மதிக்காமலும் காலம் தாழ்த்தியதன் காரணமாகவே ஆளுநருடன் ஆன தேனீர் சந்திப்பைப் புறக்கணித்தேன் என்றும், ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையே சுமுகமான உறவு என்பது தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த மசோதா ஆளுனர் மாளிகை வளாகத்தில் தூங்கி கிடக்கிறது. இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருகிறார் என்று தனது வருத்தத்தையும் முதல்வர் பதிவு செய்தார். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு எதிரான இந்த செயலுக்கு எதிர்ப்பு வகையிலும் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் அவருடனான தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மேலும் இதுகுறித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
