தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேறு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் . முதலில் மாநில அரசுடன் தமிழிசை இணக்கமாக இருந்தார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாநில அரசு- ஆளுநர் இடையேயான விரிசல் அதிகரிக்கக் தொடங்கியது. இதற்கிடையே புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் தமிழிசை நியமிக்கப்பட்டார்.ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை புறக்கணிக்கப்பட்டது. இதற்கு தமிழிசையும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதேபோல், யாத்ரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நடைபெற்ற திறப்பு விழாவிலும் தமிழிசை சௌந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியொரை சந்தித்து பல்வேறூ புகார்களை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.அதன்பின்னர் செய்தியாளரகளை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,டிஆர்எஸ் அரசு பெண் ஆளுநரிடம் அவமரியாதையாக நடந்து கொள்கிறது என்றும் கூறியிருந்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உகாதி நிகழ்ச்சியை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் புறக்கணித்தனர். இதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் தமிழிசைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழ் புத்தாண்டையொட்டி அவர் அளித்த விருந்தையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இத்தகைய சூழலில், தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றூள்ளார். விரைவில் தமிழிசை சௌந்தரராஜனை கேரளா அல்லது பாஜக ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.