ஜனவரி முதல் அகவிலைப்படி 3சதவீதம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், பென்சனர்களும் பயனடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், பென்சன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்படுகிறது. பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் பணவீக்கம் 6.07 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வையும் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் கடைசியாக 2021 ஜூலை மாதம் வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டது. அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும்.
வீட்டு வாடகை படி தொகை அந்தந்த நகரத்துக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. X நகரங்களுக்கு 24சதவீதம், Y நகரங்களுக்கு 16சதவீதம், Z நகரங்களுக்கு 8சதவீதம் என்ற அடிப்படையில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது.
X நகரங்களுக்கு 5400 ரூபாய்க்கு மிகாமலும், Y நகரங்களுக்கு 3600 ரூபாய்க்கு மிகாமலும், Z நகரங்களுக்கு 1800 ரூபாய்க்கு மிகாமலும் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது.