நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (10.12.2021) மொரப்பூர் – தருமபுரி இடையேயான ரயில்பாதை திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் மண்டல வாரியாகவும் வழித்தடம் வாரியாகவும், திட்டம் வாரியாகவும் நிலுவையில் பணிகள் குறித்த விவரங்கள் என்ன? என்று பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த விபரங்கள் பின்வருமாறு:
தருமபுரி – மொரப்பூர் இடையிலான புதிய தொடர்வண்டிப் பாதை தாமதம் ஆவதற்கான காரணம் மத்திய அரசுக்குத் தெரியுமா? என்றும் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பினார்.
அதற்கு ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு:
மொரப்பூர் – தருமபுரி இடையிலான 36 கி.மீ நீள புதிய ரயில்வே பாதைத் திட்டம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.359 கோடி ஆகும். 78 ஆண்டுகளுக்கு முன் குறுகிய பாதையாக இருந்த இந்தப் பாதை மூடப்பட்ட போது, பாதை அமைந்திருந்த நிலம் 1941-ஆம் ஆண்டில் மாநில அரசிடம் வழங்கப்பட்டது.
அந்த நிலத்தை மாநில அரசு தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்து விட்டது. மொத்தம் 36 கி.மீ நீள பாதையில் 28 கி.மீ பழையத் தடத்திலும் 8 கி.மீ பாதை புதிய பாதையிலும் அமைக்கப்படவுள்ளன. அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்காக அளவீடு செய்து தரும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படுவது என்பது பல்வேறு காரணிகளை பொறுத்தது. அதனால், இந்தத் திட்டம் எப்போது நிறைவேற்றி முடிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்க முடியாது. ஆனால், இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றி முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.