பருவமழை காரணமாக தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு பல்வேறு திட்டத்தை கொண்டு வந்தது. இத்தகைய நேரத்தில் மழையின் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை மற்றும் பாதிப்புகளை தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. பாதிப்பு இருப்பதை அறிவிக்க வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ எடுத்து புகார்களை அனுப்பலாம் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளம், ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மற்றும் சென்னை மற்றும் கடலூரில் பல குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய சம்பவங்கள், உயிரிழப்புகள் போன்றவை தமிழக மக்களின் நினைவுகளில் இன்னும் பசுமையாக உள்ளன.அதேபோல் நோரந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசு தக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தது. எனவே தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்காக மத்திய அரசின் உதவியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நாடியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதல்கட்டமாக 549 கோடியே 63 லட்ச ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடியே 86 லட்ச ரூபாயும் என மொத்தம் 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்ச ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் 550 கோடி ரூபாயை உடனடி நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருவதால், பின்னர் கணக்கெடுக்கப்பட்டுள்ள கூடுதல் சேத விவரங்களின்படி, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு 521 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க ஆயிரத்து 475 கோடி ரூபாயும் என மொத்தம் ஆயிரத்து 996 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தற்காலிக சீரமைப்பிற்கு ஆயிரத்து 70 கோடியே 92 லட்ச ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3 ஆயிரத்து 554 கோடியே 88 லட்ச ரூபாயும் என மொத்தம் 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்ச ரூபாயும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தொகையும் தற்போது வரை பெய்த மழை, வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு கேட்கப்பட்டது தான். அடுத்தடுத்த நாட்களில் மழையின் அளவு தீவிரம் அடைந்தால் தமிழக அரசு சார்பில் கேட்கப்படும் நிதியும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு போதிய உதவியை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2010-11 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசு சார்பில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் வெறும் 9,390 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவே போதுமானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த பருவமழை காலத்தை கையாள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு நாம் தவறும்போது, அது, தான் யார் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது. எனவே, இயற்கையைக் கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.கடந்த 24-9-2021 அன்று, ‘வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்’ குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகளை நான் வழங்கியிருக்கின்றேன். பாதிப்புக்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்..
எனவே, போதுமான முன்னேற்பாடுகளுடன் அரசு செயல்பட்டு வருகிறது.