வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியது.
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.
கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கிய ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் இன்னும் நீடிக்கிறது. அந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைத்துள்ளது.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை, ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது.
அருணாசலபிரதேசத்தில் சீன ராணுவம் கிராமங்களை உருவாக்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதிய கொரோனா, இந்தியாவுக்கு வராமல் தடுப்பதில் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.