
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், தொலைதூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போட் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதுகுறித்து, பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறியதாவது..,
தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தவிர, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கமாகும். பாஸ்போர்ட் சேவைகளைப் பெற மக்கள் இனி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை.
இந்த வேன் முதலில் தாம்பரத்தில் நிறுத்தப்படும். பின்னர், பாஸ்போர்ட் பெறுவதற்கான கால வரம்புகள் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும். பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம், பாஸ்போர்ட் சேவைகளைப் பெற ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
