
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 குறைந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாகவும் தங்கத்தின் மீதான முதலீடு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் பதற்றம் தனியும் வரை தங்கம் விலை கனிசமாக அதிகரிக்கும் என்றும், ஈரானில் எண்ணெய் கிணறுகள் தாக்குதலுக்கு உட்படுவதால் கச்சா எண்ணெய் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை அதிரடி ஏற்றங்களை கண்டு வருகிறது. அவ்வப்போது குறைவதும் உயர்வதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக அதிகரித்திருப்பதே கசப்பான உண்மை. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.50,000 என்கிற அளவில் இருந்த தங்கம் விலை, நடப்பு ஆண்டில் ரூ.70,000ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. அதன்பிறகும் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு 74 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.840 குறைந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.74,000க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.9,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
