• Mon. Mar 24th, 2025

எங்கள் மொழியை அழிக்க நினைத்தால் விடமாட்டோம்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழா கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், ‘அப்பா’ என்ற செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின் அவர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையை இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு உயர்த்தியவர் அன்பில்மகேஷ். அவர் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை, தமிழக அரசுக்கும் உள்ளது.

தேசிய கல்விக்கொள்கை என்பது சமூகநீதிக்கு வேட்டு வைப்பதாகும். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேட்டு வைக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன். எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல. ஆனால், மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்.” என்று பேசினார்.