

அனைத்து தரப்பு மக்களின் சொந்த வீடு கனவு திட்டத்தை நிறைவேற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 என்ற வீடு விற்பனை கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன்பின் சூப்பர் சென்னை முன்னெடுப்பை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று தெரிய வைப்பது கட்டிடங்கள் தான். மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் தேவைகள் அனைத்தையும் அரசே செய்துவிட முடியாது. ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ததற்கு பாராட்டுகள். கோவை, மதுரை, ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
தமிழகம் மிகவும் நகர் மயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. வீடுகளின் தேவை அதிகரித்து வருவதை கணக்கிட்டு புதிய திட்டங்களை தீட்ட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை வளப்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. கோவை, மதுரைக்கான திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும். சென்னையின் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது. கட்டடங்களுக்கான ஒப்புதல் வழங்கும் கால அளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் அனைவரின் சொந்த வீடு கனவை நனவாக்க சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ் 51 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 48 சதவீத மக்கள் நகரங்களில் வசித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும். புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். அனைத்து தரப்பு மக்களின் சொந்த வீடு கனவு திட்டத்தை நிறைவேற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

