இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.
இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த கருத்துகள் தவறானது என ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், துபாயில் இருந்து நேற்று அதிகாலை மும்பை விமான நிலையத்திற்கு வந்ததும், எனது பைகளை எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளை சந்தித்தேன். அவர்களிடம் நான் சட்டப்பூர்வமாக எடுத்து வந்த பொருட்களை காண்பித்து இவற்றிற்கான சுங்க வரியை செலுத்துவதாகவும் கூறினேன்.
இதற்கு ஒத்துழைப்பு தந்த சுங்கத்துறை அதிகாரிகள், பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கூறினர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். பொருட்களுக்கான சுங்க வரியை செலுத்த அதிகாரிகள் முறையான மதிப்பீடு செய்து வருகின்றனர்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக தவறான கருத்துகள் உலவுகின்றன.
மேலும், அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும். ஆனால், சமூக வலைத்தளங்களில் ரூ.5 கோடி என்று தவறாக கூறி வருகின்றனர்.
நான் இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசு துறைகளுக்கு மரியாதை தருபவன். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டிருந்தார்.