கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைபாடுகள் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனவும், ஊழியர்களின் அலட்சியமான அணுகுமுறையால் ஏழை நோயாளிகள் பெரும் அவதிப்படும் சூழல் நிலவுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன.
அவ்வப்போது தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் கிடைக்கும். நிலையில் அவர் திடீர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்தும் சென்றிருந்தார். அப்போது அவருடன் அழுது புலம்பிய இளம்பெண் ஒருவர் தனது கணவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுத்தும் இதுவரை அறிக்கை கிடைக்காததால் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. தனது கணவரை காப்பாற்றுமாறு அமைச்சரிடம் அழுது புலம்பினார்.
மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமான அணுகுமுறை தொடர்பாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்ட நோயாளி ஒருவரையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனது ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், திமுக அரசு பதவியேற்ற பின்பு மூன்று முறை ஆய்வு மேற்கொண்டதாகவும், மாதம் தோறும் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் குறைகளை களைவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மருத்துவக்கல்லூரி தொடர்பாக அதிக அளவில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து நன்கு கவனித்து அவற்றை போக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் டங்கு காய்ச்சல் தொடர்பாக களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.