தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான முக்கிய அறிவிப்பை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, எஞ்சிய மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த மூன்று மாதங்களாக சிறப்பாக தி.மு.க., அரசு பணியாற்றி வருகிறது. முந்தைய அரசின் தலைவர்கள் புகைப்படம் ஒட்டிய புத்தகப்பையை வீணாக்காமல், அதனையே வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 13-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க., அமோக வெற்றி பெறும்” எனக் கூறினார்.