பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகததால் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 14 ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீரா மிதுனின் முகத்திரையை கிழித்து முதல் முறையாக சோசியல் மீடியாவில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜோ மைக்கேல். இதனால் மீரா மிதுன் ஜோ மைக்கேலை அவதூறாக திட்டி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கேல் பிரவீன் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீரா மிதுன், ஜோ மைக்கல் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டார். நேற்று புழல் சிறையில் மீரா மிதுனை எம்.பி.நகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மீரா மிதுனிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த உள்ளதாக அனுமதி கோரி எம்.பி.நகர் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மீரா மிதுன் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கொலை மிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்றாலும் மீரா மிதுன் வெளியே வருவதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அதாவது பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது.