நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் பிரைமில் சில மாதங்களுக்கு முன் வெளியானது. ராஜ் மற்றும் டீகே இயக்கி இருந்த இந்தத் தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, உதயபானு மகேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் சமந்தா, ஈழத் தமிழ்ப்பெண்ணாக நடித்திருந்தார். இந்தத் தொடருக்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி கண்டனங்கள் வலுத்தது .
இந்நிலையில் நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்றில், ’தி ஃபேமிலிமேன் 2’ வெளியாகும் முன்பு வந்த கண்டனம், அந்த தொடர் வெளியான பிறகு நின்று விட்டது. இருந்தும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அந்த தொடரில் ராஜி என்ற கேரக்டரில் ஈடுபாட்டுடன் நடித்தேன். அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டு இருந்தால் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.