பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்ட வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகததால் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 14 ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று மீரா மிதுனை கைது செய்த போலீசார், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஜோ மைக்கேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலும் இரு தினங்களுக்கு மீராவை விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.