• Thu. Mar 28th, 2024

2 வளர்ப்பு நாய்களோடு உக்ரைனில் ஊட்டி திரும்பிய மருத்துவ மாணவி!

உக்ரைனில் இருந்து மருத்துவ மாணவி ஊட்டி திரும்பினார். அவர் தான் வளர்த்த 2 நாய்களையும் அழைத்து வந்தார்.  

இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு ரஷியா போர்தொடுத்து வருவதால், அங்கு இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடாவை சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஆர்த்தியும் அங்கு சிக்கி இருந்தார்.  உக்ரைன் கிவ் பகுதியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்த அவர், கடந்த 10 நாட்களாக கிவ் பகுதியில் பதுங்குகுழியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்தார்.  

இந்த நிலையில் அவர் தான் வளர்த்து வந்த 2 நாய்களுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை பெற்றோர் வரவேற்றனர். இதுகுறித்து மாணவி ஆர்த்தி கூறுகையில், கிவ் பகுதியில் இருந்து 10 நாட்கள் வெளியேற முடியாமல் கட்டிடத்தின் அடியில் தஞ்சமடைந்தேன். அங்கு பல இந்திய மாணவர்களும் உடன் இருந்தனர். அங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்ற போது தாக்குதல் நடந்ததால், மீண்டும் பழைய இடத்துக்கு வந்தோம்.  உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். பின்னர் ரெயில் மூலம் ஹங்கேரி எல்லைப் பகுதிக்கு வந்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது 2 வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்த்தேன். பெற்றோர் வளர்ப்பு நாய்களை அங்கேயே விட்டு வரும்படி கூறினர். அதற்கு நான் வளர்ப்பு நாய்களுடன் தான் வருவேன் என்று தெரிவித்தேன்.  

நான் வளர்ப்பு நாய்களுடன் வர இருந்ததால் முதலில் விமானத்தில் டெல்லி வர அனுமதி தரவில்லை. பின்னர் அதற்காக தனி கூண்டு வாங்கி, அதில் அடைத்த பின்னர்தான் அனுமதி கிடைத்தது. பின்னர் நான் 2 நாய்களையும் விமானத்தில் அழைத்து வந்தேன். டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு திரும்பினேன்.  சொந்த ஊருக்கு திரும்ப டிக்கெட், உணவு போன்ற உதவிகளை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எனது மருத்துவ படிப்பு என்ன ஆகும் என்று தெரியவில்லை. எனவே, மருத்துவப் படிப்பை முடிக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரிக்கு திரும்பிய மாணவர்கள் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, நீலகிரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 20 பேர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். போர்ச்சூழலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 20 பேரும் பாதுகாப்பாக மத்திய, மாநில அரசுகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வந்து உள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *