• Wed. Apr 24th, 2024

மே.7 ஊட்டி கோடை விழா துவங்குகிறது-மே. 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மலா்க்கண்காட்சி

ByA.Tamilselvan

May 4, 2022

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 7 கோடை விழா துவங்குகிறது.முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி மே20முதல் 24 வரை நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சரிவர நடைபெறவில்லை. இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த ஆண்டு கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து நீலகிரி கோடைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மே மாதத்தில் கொண்டாடப்படவுள்ளது.
7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடம் போன்ற சிறப்புமிகு வண்ண புகைப்படங்கள் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக இக்கண்காட்சியில் இடம்பெறும்.
இதையடுத்து 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டியில் அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா மலா்கண்காட்சியும் நடக்கிறது.கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலா்க்கண்காட்சி 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடைபெறுகிறது.
கோடைவிழாவில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பழங்குடியினா் கலாச்சார மையத்திலும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அரசினா் தாவரவியல் பூங்காவிலும், 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடத்தப்படவுள்ளது.18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மகளிர் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஆவின், இன்கோசா்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி ஊட்டி பழங்குடியினா் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெறவுள்ளது. கோடைவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான படகுப்போட்டி 19-ந்தேதி ஊட்டி ஏரியில் நடக்கிறது. இந்த ஆண்டு கோடைவிழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைதீவிரமாக செய்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *