• Thu. Apr 18th, 2024

உலக பணக்காரர் பட்டியிலில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் மார்க் சக்கர்பெர்க்..

Byகாயத்ரி

Apr 30, 2022

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டது.

18 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த ஃபேஸ்புக் முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் தனது பயனாளர்களை இழக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்கத் தொடங்கின. கடந்த ஜூலை மாதம் 350 டாலருக்கும் மேல் வர்த்தகமான ஃபேஸ்புக்கின் ஒரு பங்கின் விலை தற்போது 200 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தற்போது 12-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி கடந்த ஜூலை மாதம், மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 142 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளும் சுமார் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஃபேஸ்புக்கின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம், அந்நிறுவனம் பயனாளர்களை இழக்கத் தொடங்கியதே.199 கோடியாக இருந்த ஆக்டிவ் யூசர்ஸ் எனப்படும் ஃபேஸ்புக்கின் தினசரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 192 கோடியாக சரிந்துள்ளது. இதனால், சுமார் 75 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான பின்பு கடந்த பிப்ரவரி 3-ம் தேதியன்று, ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 220 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

மேலும் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் வீடியோ வடிவிலான பதிவுகளை விரும்பும் நிலையில், ஃபேஸ்புக் பெரும்பாலும் எழுத்து வடிவமான பதிவுகளைக் கொண்டிருப்பதும் அதன் சரிவிற்கு முக்கியக் காரணம் ஆகும். அதேபோன்று, டிக்-டாக், யூ-டியூப் போன்ற நிறுவனங்களின் அதீத வளர்ச்சியும் ஃபேஸ்புக்கின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் தனியுரிமைக் கொள்கைகளில் கொண்டு வந்த மாற்றமும் ஃபேஸ்புக்கின் வருவாயை பாதித்துள்ளது. ஃபேஸ்புக்கின் வருவாயில் 97% விளம்பரத்தை நம்பியுள்ள நிலையில், ஆப்பிள் செய்துள்ள விதி மாற்றத்தினால், அந்நிறுவனத்திற்கு 10 பில்லியன் டாலர் வருவாயை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *