• Mon. Apr 21st, 2025

குடும்பத்தகராறில் மனைவியை தலையில் தாக்கி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..

ByM.JEEVANANTHAM

Mar 17, 2025

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பரந்தாமன் மகன் சரவணன் என்பவர் 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு காரணமாக 3 மாத கர்ப்பிணியான தேவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின்னரும் சரவணன் அடிக்கடி தேவியை சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி தேவி அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து, மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பரமநாதன் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரவணன் சரிவர வேலைக்கு செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்து வந்ததால் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், திருப்புங்கூரில் தந்தை வீட்டில் தங்கியிருந்த தேவியை சம்பவத்தன்று சந்தித்த சரவணன் அவரை தாக்கி, தலையை சுவற்றில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும், இதில், தலையில் பலத்த காயமடைந்த தேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீஸார் சரவணனை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார். வழக்கினை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி சரவணனை குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சரவணன்(40) கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் ராமசேயோன் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலசந்திரன் உள்ளிட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.