

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கிய சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே அப்பள்ராஜா ஊரணி உள்ளது இந்த ஊரணியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுடுகாடும் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கிணற்றில் பின் தலையில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக காவலாளி இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் ஆய்வாளர்
அசோக்பாபு தலைமையில், காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்க முயற்சி செய்த பொழுது, மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு நிலை அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். பின்பு, இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தை மகன் நீராத்து பாண்டி (வயது 48)என்பது தெரியவந்தது.

மேலும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து ஐந்து ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார். இவர் கிடைத்த வேலைக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு அப்பகுதியிலேயே இருப்பதாகவும், இதனால் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு யாரும் அடித்து கொலை செய்து போட்டார்களா அல்லது மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்பு தான் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலையா என்று தெரிய வரும் எனவே போலீசார் தெரிவித்தனர்.

