

அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான திரைப்படம், மகான். ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் பல பாராட்டுக்களை பெற்ற நிலையில், அப்படக்குழு கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளது!
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்கு பெயர் போன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மிரட்டியுள்ள மகான் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மகான் படம் எக்ஸலன்ட்டாக இருக்கிறது என பேட்ட நாயகன் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு போன் செய்து பாராட்டி உள்ளார். மேலும், நடிகர் விஜய் 7 ஸ்க்ரீன் தயாரிப்பாளருக்கு போன் செய்து மகான் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மகான் படத்தை கொண்டாடி வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவினரை அழைத்து ஒரு அட்டகாசமான சக்சஸ் பார்ட்டியையும் நடத்தி உள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சற்று முன்னர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மகான் Living Big என அந்த பிரம்மாண்ட கேக்கில் போடப்பட்டிருப்பதை போல, ஒரு பெரிய கூட்டமே இணைந்து இந்த படத்திற்காக உழைத்துள்ளதை உணர்த்தும் வகையில் ஒட்டுமொத்த மகான் டீம் உடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சியான் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்த நிலையில், மகான் திரைப்படம் நடிகர் விக்ரமுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மகான் படம் வெறும் சாம்பிள் தான் என்றும் சியான் விக்ரம் இனிமேல் தான் விஸ்வரூபமே எடுக்கப் போகிறார் என விரைவில் வெளியாக உள்ள அவரது படங்களான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வனை எதிர்பார்த்து விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துருவ நட்சத்திரம் படமும் பெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


