உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கியது. புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
அதில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்கியது. 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இந்த மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும்
பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிரயாக்ராஜ் நகரில் உள்ள கோயில்கள், அகாராக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.