உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் 8வது நாள் நிகழ்வாக பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு 9வது நாளாக மீனாட்சியம்மன் திக்குவிஜயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று மாலை மீனாட்சி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதி உலாவாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், பவளக்கனிவாய் பெருமாள் கருட வாகனத்திலும் வீதி உலாவாக சென்று மாசி வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் முன் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
மதுரை சித்திரைப் பெருவிழா: மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் வீதியுலா
