• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

Byவிஷா

Feb 13, 2023

நற்றிணைப் பாடல் 113:

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர
பின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்
ஆம்பல்அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

பாடியவர்: இளங்கீரனார்
திணை: பாலை

பொருள்:

 உழைமான்கள் இரத்தி மரத்திலுள்ள காய்களை (இலந்தை) அண்ணாந்து உண்கின்றன. அந்தக் காய்கள் கல்லுப் பாதை நெடுக உதிர்ந்து கிடக்கின்றன. பெண்ணே! இப்படிப்பட்ட காட்டு வழியே செல்ல எண்ணியுள்ளேன் என்றேன். உடனே, நெய்தல் மலர் போன்ற அவள் கண்கள் கலங்கின. அதனை அவன் தன் பின்னிய கூந்தலால் மறைத்துக்கொண்டு பெரிதும் வருந்தினாள். அரசன் உதியன் போரிட்டு வென்றான். அந்தப் போர்க்களத்தில் குழல் ஊதுவோர் ‘ஆம்பலம் குழல்’ (ஆம்பல் தண்டில் செய்த குழல்) ஊதினர். அந்த ஊதல் ஒலி போல அவள் தேம்பினாள். புலம்பும் முகத்தோடு பார்த்தாள். அந்தப் பார்வை இப்போதும் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. இப்படித் தலைவன் கூறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *