• Fri. Apr 19th, 2024

இலக்கியம்

Byவிஷா

Feb 14, 2023

நற்றிணைப் பாடல் 114:

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன்மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி
மையல் மடப் பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே

பாடியவர்: தொல்கபிலர்
திணை: குறிஞ்சி

பொருள்:
இங்கு நான் ஆரவாரம் மிக்க ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவர் வரும் வழியை நினைத்தால் எனக்கு ஒரே அச்சமாக இருக்கிறது – என்கிறாள் தலைவி.

யானைத் தந்தங்களைப் பாறைமேல் வைக்கின்றனர். பச்சைக் கறியை விரல் நகத்தால் கிள்ளுகின்றனர். தெருவெல்லாம் புலால் நாற்றம் வீசுகிறது. ஊரெல்லாம் ஒரே ஆரவாரமாக இருக்கிறது. இந்தத ஆரவாரத்துக்கு இடையில் நான் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன். குன்ற நாடன், என் காதலன் இங்கு நாள்தோறும் வருகிறான். இவன் இரக்கம் கொள்ளத்தக்கவன். மழை பொழிந்து வெள்ளத்தால் புள்ளி பட்டு வெடித்துக்கொண்டிருக்கும் கரை வழியாக வருகிறான். வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறத்து. இந்த ஆற்று வழியை நினைத்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஈரக் குரல் கொடுக்கும் இடி முழக்கம் படமெடுத்து ஆடும் பாம்பை அழிக்கும். அது மலைப்பாதை. பெண்யானை அலர ஆண்யானை தன் கையால் பிடித்துக்கொள்கிறது. ஆற்று வெள்ளம் ஆண்யானையை மட்டும் இழுத்துச் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *