நற்றிணைப் பாடல் 178:
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: நெய்தல்
பொருள்:
ஆடும் மூங்கிலின் உள்ளே இருக்கும் சோற்றுச் செதிள்களை போன்று சிறகு இறகில் தூவி மயிர் கொண்டது அகன்ற கால்களை உடைய நாரை. ஆண் நாரை தன் பெண்மையை உண்டது என்னும் வருத்தத்துடன் பெண் நாரை கழியில் மேயும் சிறுமீன்களையும் உண்ணாமல் தாழை மடலில் புலம்பிக்கொண்டு அமர்ந்திருக்கும் துறையின் தலைவன் அவன். அவன் வரும் தேரை நேரில் நின்று கண்ணால் காணவும் என்னால் முடியவில்லை. (தாய்க் கட்டுப்பாட்டில் வீட்டில் அடைந்துகிடக்கிறேன்.) நான் கேட்கும் பறவைகளின் ஒலி கூட அவன் தேர்மணி ஒலி போலவே எனக்குக் கேட்கிறது. அவரை நம்பிய என் நெஞ்சுக்கு இப்படித்தான் தோன்றுகிறது. இப்படித் தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.