• Thu. Apr 25th, 2024

இலக்கியம்

Byவிஷா

May 30, 2023

நற்றிணைப் பாடல் 177:

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப் பட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்
பீலி சூட்டி மணி அணிபவ்வே
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே

பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: பாலை

பொருள்:

 விரிந்த தீ காட்டை அழிக்கிறது. மரத்தில் பற்றிக்கொண்டு தீ மகிழ்கிறது. ஒதுங்குவதற்கு இடமில்லாத அந்தக் காட்டில் அவர் செல்கிறார். இப்படி நிகழப்போவதை நான் குறிப்பால் கண்டுகொண்டேன்.  வீட்டுப் பட்டவன் கோயிலிலுள்ள (நடுகல்) வேலையும் கேடயத்தையும் அவர் துடைக்கிறார். மயில் பீலி சாத்துகிறார். முன்பு இல்லாததை விட எனக்குப் பெரிதும் இன்பம் தருகிறார். இந்த அறிகுறிகளால் நான் தெரிந்துகொண்டேன். திருமணத்துக்கு முன்பு, அவர் வராதபோது, கண்ணிலுள்ள பாவை கலங்கும்படிப் பாய்ந்த கண்ணீர் வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். அப்படி நொந்து நொந்து கண்ணீரில் நீந்தும் நாள் மீண்டும் வந்துவிட்டது போலும். தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்லிக் கலங்குகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *