• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

இலக்கியம்

Byவிஷா

Jun 3, 2023

நற்றிணைப் பாடல் 179:
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள் மன்னே இன்றே
மை அணற் காளை பொய் புகலாக
அருஞ் சுரம் இறந்தனள் என்ப தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே

திணை: பாலை

பொருள்:

 இல்லத்தில் என் மகள் வளர்த்த வயலைச் செடி செழித்திருந்தது. கன்று போட்டிருக்கும் பசு அதனைத் தின்றது.  (கன்று போட்ட பசு ஆனதால் அதனை ஓட்டவும் விருப்பம் இல்லை. வளர்த்த செடி பறிபோகிறதே என்ற கவலையும் ஒருபுறம்.) என் மகள் விளையாடிக்கொண்டு தன் கையில் வைத்திருந்த பந்தையும், பாவைப் பொம்மையையும் நிலத்திலே வீசி எறிந்துவிட்டுத் தன் வயிற்றில் அடித்துக்கொண்டாள். இப்படிச் செயல்படும் குறுமகள் அவள். மானைப் போல் மயக்கம் தரும் பார்வை கொண்டவள் அவள். 

செவிலி சொல்கிறாள். யானும் அவளைப் பெற்ற தாயும் தேன் கலந்த பாலை அவளுக்கு ஊட்டினோம். அதனை உண்ணாமல் விம்மி விம்மி அழுதாள். நேற்றுக்கூட அப்படித்தான் இருந்தாள். இன்று இளந்தாடி கொண்ட காளை ஒருவனோடு போய்விட்டாள் என்கின்றனர். அவனது பொய்ம்மொழியைப் புகலிடமாகக் கொண்டு போய்விட்டாள் என்கின்றனர்.
கடத்தற்கு அரிய பாலைநில வழியில் போய்விட்டாள் என்கின்றனர். முல்லை மொட்டுப் போன்ற வெண்பற்களைக் காட்டிக்கொண்டே போய்விட்டாள் என்கின்றனர். ஒரே கவலையாக இருக்கிறது.