
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாகும்.
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது. மற்ற உலகநாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக 1945 அக்டோபரில் உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபை அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது.இதன் உருவாக்கத்தில் நம் இந்திய நாடும் முக்கிய பங்கு வகித்து உறுப்பினராகச் சேர்ந்தது பெருமைக்குரிய விஷயம்.
ஜப்பான் நாட்டின் பழமையான ஹனாமிடோ ஆலய அமைப்பிலேயே அமைதி மணியின் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய ஐக்கியநாடுகள் சபை அமைப்பு சார்பில் உலகின் பல நாட்டுப் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மற்றும் குழந்தைகளிடம் அந்நாட்டின் நாணயங்கள் நன் கொடையாகப் பெறப்பட்டு அமைதிமணி உருவாக்கப்பட்டது. இந்திய, தமிழகக் குழந்தைகளின் பங்களிப்பும் இதில் உள்ளது.இது 1945 ஜூன் 8ல் ஜப்பானிய மக்களால் ஐ.நா.சபைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
ஆண்டுக்கு இருமுறை ஒலிக்கப்படும். முதலாவதாக ‘வசந்தகால வசன உத்தராயண’ நாளன்று உலக பூமிதினத்தினை கொண்டாடும் விதமாக உலக பூமிப் பாதுகாப்பு அமைப்பு தேர்வு செய்யும் அமைதி ஆர்வலரால் ஒலிக்கப்படும். இரண்டாவதாக ஐ.நா.பொதுச் செயலாளரால் செப்டம்பர் 21 அன்று ஒலிக்கப்பட்டு அவரது அமைதி தின உரையும் நிகழ்த்தப்படும்.

சர்வதேச அமைதி தினம் 1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ல் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் போர்கள் நிறுத்தப்பட்டு ‘போர் நிறுத்த நாள்’ ஆகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் எந்த மூலையிலும் போர், வன்முறை நிகழாமல் இன்று பார்த்துக் கொள்ளப்படும்.
கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்ற போர்களில் நிர்கதியாகக் கொல்லப்பட்ட 300 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களை இன்று நொடியில் தாக்கிக்கொல்லும் தீயசக்தி படைத்தவர்களாக மனித இனம் மாறியுள்ளது.வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், லஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபட்டு அமைதியான, போரற்ற, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட இந்த உலக அமைதி தினத்தில் உறுதியேற்போம்.

