காந்தி ஜெயந்தி தினமான இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்தார் முதல்வர். பாப்பாபட்டி செல்லும் வழியில் உள்ள கே.நாட்டம்பட்டியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிதிருந்த விவசாய பெண்களிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ”பாப்பாபட்டி மக்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்கமுடியாத நிகழ்வாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டம் அமைந்துள்ளது. பாப்பாபட்டி மக்களால் போற்றப்படும் உதயச்சந்திரன் எனக்கு தனிச்செயலாளராக உள்ளார்.

தேர்தலில் சொல்லிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்.
பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தரப்படும். கிராமம், நகரம் பெருநகரம் என ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஒளிமயமான தமிழகமாக உருவாக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.