இந்துமத வழிபாட்டுத் தலங்களில், நவக்கிரகங்களில் ஒன்றானதும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோயிலாகவும் உள்ளது சனீஸ்வர பகவான் கோயில்! தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோயில் கொண்ட இடம் குச்சனூர்தான்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில், சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்திருக்கிறது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும் என்று நம்பப்படுகிறது! இங்கு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் தங்கள் குறைகள் தீர்ந்திட இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர்.
தமிழகத்தில், உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில், சித்தர் சமாதி இருப்பது வழக்கம்.. பழனியில் போகர், ஸ்ரீரங்கத்தில் கொங்கணர், மருதமலையில் பாம்பாட்டி சித்தர்களின் சமாதி இருப்பதுபோல், சனிபகவான் கோயிலில் லாடம் சன்னியாசி சித்தர் சமாதி அடைந்துள்ளார்! இதுகுறித்தான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது! கேரள தேசத்தில் இருந்து, வந்த லாடம் சன்னியாசி சித்தர், கேரளாவில் சனி பகவானுக்கு என்று தனி கோயில் அமைக்க முற்பட்டு அது முடியாமல் போன காரணத்தினால், கேரள தேசம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாம்! செய்வது அறியாது, தனக்கு ஒரு வழி காண்பிக்குமாறு சனி பகவானிடம் உருகி வேண்டிக்கொண்டார் சித்தர்!
அவரது வேண்டுதலை கேட்ட சனி பகவான், தனது இடது புறத்தில் ஜீவசமாதி அடைந்துகொள்ளுமாறும், ஆண்டுக்கு ஒரு முறை சித்தருக்கு முதல் வழிபாடு நடந்தபின்பு கோயிலில் பிற கடவுள்களுக்கு வழிபாடு நடத்தப்படும் என்ற உத்திரவாதத்தையும் சித்தருக்கு கொடுத்து மறைந்தார்! அதன்படி பிற நாட்களில், சனி பகவான், பிற தெய்வங்களுக்கு வழிபாடு நடந்தபிறகு லாடம் சன்னியாசி சித்தருக்கு வழிபாடு நடத்தப்படும்.. ஆனால், ஆடி மாதம் 3வது திங்களன்று சனி பகவானை தொடர்ந்து, ஆணி செருப்பில் நடப்பதால் லாட சித்தர் என்று அழைக்கப்பட்ட சித்தருக்கு வழிபாடு முடிந்த பின், பிற தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படும் வழக்கம் உள்ளது. அன்றைய தினம் அன்னதானம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும், என்று கோயில் பூசாரி சிவகுமார் தெரிவித்துள்ளார்!