உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள், கடந்த இரு மாதங்களில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த 5 பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் தர மருத்துவமனைக்கு இணையாக சிறப்பு சிகிச்சை அளித்து ஆரோக்கியத்துடனும், எடை அதிகரிக்க செய்தும் குழந்தைகளை மீட்டெடுத்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை பலரும் பாராட்டி வரும் சூழலில், இதனை அறிந்த உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் அரசு மருத்துவமனையின், மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை தமிழ்நாடு அரசின் உதவியுடன் இணைந்தும், சொந்த செலவிலும் செய்து கொடுப்பதாக உறுதியளித்து ஊக்கப்படுத்தினர்.