• Wed. Apr 24th, 2024

கொடநாடு வழக்கில் கூடுதல் கால அவகாசம் கேட்கும் தமிழக அரசு!

Kodanadu case

கொடநாடு வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றம் அக். 1ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருந்தார்.. அதனை தொடர்ந்து அவரை மீண்டும் மறுவிசாரணைக்காக ஆஜராகும்படி போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது.. அதனை தொடர்ந்து சயான் கடந்த 17ஆம் தேதி ஊட்டியில் இருக்கும் நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர் .

அந்த விசாரணையில் சயான், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அந்த விவரங்கள் அனைத்தையும் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வைத்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் காருக்கு முன்னாள் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்து அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். அதனை தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், தன்னுடைய சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்தார்.

இதனால் தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் கடந்த 24ஆம் தேதி ஊட்டியில் வைத்து சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் தனது தம்பி விபத்தில் சாகவில்லை. அது மரணம் கிடையாது. திட்டமிட்ட கொலை. எனவே தம்பியின் விபத்து வழக்கை மறுபடியும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சயான் மற்றும் கனகராஜின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதி உதகை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சயான், மனோஜ் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.. அப்போது அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதனைதொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டது. அதனால் வழக்கு விசாரணை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *