மதுரை மாவட்டத்தில் 200 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலையில் 170 தனியார் மழலையர் துவக்க பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மழலையர் துவக்கப்பள்ளி செயல்பட அடிப்படை அங்கீகாரம், தீயணைப்பு துறை சான்றிதழ், சுகாதார ஆய்வாளர் சான்றிதழ்,கட்டிட உறுதி தன்மை வல்லுநர் சான்றிதழ்,பார்ம் டி என்ற தாசில்தார் சான்றிதழ் உள்ளிட்டவற்றை முறையாக பெற வேண்டும்,

ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதுபோன்ற சான்றிதழ்களை பெறாமல் குடோன் போன்ற கட்டுடங்கள் வீடுகள் உள்ளிட்டவற்றில் எந்தவித அனுமதியும் பெறாமல் பாதுகாப்பற்ற நிலையில் விதியை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், துவக்க பள்ளி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா சுற்றறிக்கை ஒன்றிய அனுப்பி உள்ளார் இதில் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் மழலையர் துவக்க பள்ளியை கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும் எனவும் அங்கு பயிலும் மாணவர்களை அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் மழலையர் துவக்கப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் உரிய அனுமதி பெறாத மழலையர் துவக்கப்பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உரிய அனுமதியில்லாமல் சில பள்ளிகள் செயல்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் முழுமையான ஆய்விற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.