

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கராச்சியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போகிறேன். இது எனக்கும் அணிக்குமான சரியான முடிவாக இருக்கும். வேறு யாராவது கேப்டன் பொறுப்பினை ஏற்று மெக்கல்லமுடன் இணைந்து செயல்படுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் எனது கேப்டன் பொறுப்புக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்ந்தேன்” என்றார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த ஜூன் 2022-ம் ஆண்டு ஜோஸ் பட்லர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு 34 வயதாகிறது.அவரது தலைமையில் அதே ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும், அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொடர்களில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் நடப்பு சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தால் தக்கவைக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

