

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதி லீக் ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தியின் சுழற்பந்து வீச்சில் நியூசிலாந்து அணியை 44ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதி போட்டியில் நுழைந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் 15 ரன்களுடனும், கில் 2 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து இறங்கிய விராட் கோலி ஆறாவது ஓவரில் கிளென் பிலிப்ஸுக்கு கேட்ச் கொடுத்து அதிர்ச்சி தந்தார்.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் பட்டேல் இணை 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் அணி நெருக்கடியில் இருந்து தப்பியது. அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்து வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடும் முயற்சியில் 79 ரன்கள் இருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேஎல் ராகுல் 23 ரன்னில் வெளியேற 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது. இறுதிவரை களத்தில் நிலைத்துநின்று போராடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 249 ரன்களை சேர்த்தது இந்திய அணி. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்களை குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 45.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து.
இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது. இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணமானார்.இந்த தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி வரும் மார்ச் 4-ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது.

