

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 177 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார்.
பாகிஸ்தானின் உள்ள லாகூரில் கடாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 177 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரது இன்னிங்ஸின் உதவியுடன், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 325 ரன்கள் எடுத்தது.பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரன் இப்ராஹிம் ஜத்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இப்ராஹிம் ஜத்ரன் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானில் கேரி கிரிஸ்டன் (188), விவ் ரிச்சர்ட்ஸ் (181), ஃபஹர் ஜமான் (180*), பென் டக்கெட் (165), ஆண்ட்ரூ ஹட்சன் (161) ஆகிய வீரர்கள் அதிகபட்ச ரன்களை அடித்துள்ளனர்.
23 வயதான இப்ராஹிம் ஜத்ரனின் மைல்கல்லுக்கு முன்பு, 2004 – ஆண்டு அமெரிக்காவிற்கு எதிராக நாதன் ஆஸ்டலின் ஆட்டமிழக்காத 145 ரன்கள், 2002-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக ஆண்டி ஃப்ளவர் எடுத்த 145 ரன்கள், 2000-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சவுரவ் கங்குலியின் ஆட்டமிழக்காத 141 ரன்கள், 1998-ம் ஆண்டு டாக்காவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அடித்த 141 ரன்கள், 2009-ம் ஆண்டு செஞ்சுரியனில் இங்கிலாந்துக்கு எதிராக கிரேம் ஸ்மித்தின் 141 ரன்கள் எடுத்திருந்தனர். இவர்கள் அனைவரின் சாதனைகளையும் இப்ராஹிம் ஜத்ரன் நேற்று முறியடித்துள்ளார்.

